இன்று நாடாளுமன்றத்தில் 2016-17 – ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்துப் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே துறை கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்தார்.
துறை சார்ந்த நோக்கு, பணிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு இன்மை, வர்த்தக கவனம் குறைவாக இருத்தல் ஆகியவை ரயில்வே சிறப்பு நிலையை அடையாமல் இருப்பதற்கு காரணங்கள் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். இதற்கு தீர்வு பொது நிறுவன நோக்கத்தை மனதில் கொண்டு இந்த அமைப்பின் பணி நிலைமையை மாற்று அமைப்பதில் உள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கென ரயில்வே வாரியத்தை வர்த்தக ரீதியில் மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அமைப்பை திறம்பட தலைமை ஏற்று நடத்திச் செல்ல அதன் தலைவருக்கு தகுந்த முறையில் அதிகாரம் அளிக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
முதல் நடவடிக்கையாக பணி இயக்ககங்கள் பல, ரயில்வே வாரியத்துக்குள் உருவாக்கப்பட்டு கட்டணம் சாராத வருவாய், வேகத்தை அதிகரிப்பது, இயக்க விசை, தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
புதிதாக அலுவலர்கள் பணி அமர்த்தும் நடவடிக்கையின் போது பதவி பிரிவுகளை ஒருமைப் படுத்தும் சாத்தியக் கூறுகளை இந்திய ரயில்வே ஆராயும். இந்திய ரயில்வேயுடன் வர்த்தகம் புரிவதை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே பொதுத்துறை தனியார்துறை பங்கேற்பு பிரிவு (PPP Cell) வலுப்படுத்தப்படும், என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.