சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பா டெல்லி மருத்துவமனையில் கோமாவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பா டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார், அங்கு அவர் நினைவிழந்துள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
அதாவது அவர் குறை ரத்த அழுத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், கோமாவில் இருப்பதாகவும் முதற்கட்ட மருத்துவ அறிக்கையைக் குறிப்பிட்டு பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
இந்திய எல்லையில் உள்ள சியாச்சின் பனிப் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டர். அனைவரும் இறந்துவிட்டதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 25 அடி ஆழத்துக்கு கீழ் அவர் புதையுண்டு இருந்த அவரை ராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளது.
லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பாவை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர்.
அவர் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அடுத்த 24-48 மணி நேரத்துக்கு கடும் சிகிச்சைகள் அளித்த பிறகே அவரது நிலவரத்தில் முன்னேற்றம் உள்ளதா என்பது தெரியவரும் என்று பிடிஐ செய்தி அறிக்கை கூறுகிறது.
திங்கள் இரவு ஹனமந்தப்பாவை மீட்புப் படையினர் கண்டு பிடித்து, பனிச்சரிவு பகுதியிலிருந்து தாய்ஸே என்ற பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பிறகு விமானப்படை விமானத்தின் மூலம் டெல்லி ஆர்.ஆர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
மெட்ராஸ் ரெஜிமைச் சேர்ந்த ஹனமந்தப்பா உள்ளிட்ட 10 பேர், பனிச்சரிவில் 25 அடிக்குக் கீழ் புதையுண்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக ஹனமந்தப்பா மட்டுமே உயிருடன் இருந்திருக்கிறார், மற்ற வீர்ர்கள் உயிருடன் இல்லை. 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதி 4 பேரின் சடலங்கள் உள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாகவும் லெப்டினண்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மைனஸ் 25 டிகிரி, மைனஸ் 45 டிகிரி அதி குளிர் நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது.