டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) முன்னாள் பேராசிரியர் கிலானி கைது செய்யப்பட்டதை கண்டித்து, காஷ்மீரில் நேற்று பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டெல்லி ஜேஎன்யூ வளாகத்தில் கடந்த 9-ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக ஜேஎன்யூ முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானியும் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினரும், மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிலானி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் மாநாடு, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
மாதத்தின் 4-வது சனிக்கிழமை விடுமுறை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
எனினும் காஷ்மீரில் லால் சவுக் உட்பட பல்வேறு பகுதிகளில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. பேருந்து, ஆட்டோ போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித் தது.
அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க காஷ்மீர் முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.