இந்தியா

திஹார் சிறையில் கண்ணய்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: தமிழக போலீஸாருக்கு முக்கிய பொறுப்பு

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாருக்கு திஹார் சிறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஜேஎன்யூ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசவிரோத கோஷம் எழுப்பியதாக கண்ணய்யா கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 17-ம் தேதி டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டபோது, போலீஸ் பாதுகாப்பை மீறி தாக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, திஹார் சிறையில் அதிக பாதுகாப்பு கொண்ட சிறை எண் 4-ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்புக்கான முழு பொறுப்பும் திஹார் சிறையின் உட்புற பாதுகாப்பு பணியில் இருக்கும் தமிழ்நாடு போலீஸாரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் கைதிகளின் சிறையான இங்கிருந்து அவர் நீதிமன்றத்துக்கு எப்போது கொண்டு செல்லப்படுவார், எப்போது திரும்புவார் என்பது தமிழக போலீஸாரால் ரகசியம் காக்கப்படுகிறது. கண்ணய்யா நீதிமன்றம் கொண்டு செல்லப் படும்போது, அவரது நடவடிக்கை கள் வெளியில் தெரியாத வகையில் சிறை எண் 4-ல் மற்ற அனைத்து ‘செல்களும் மூடப்படுகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் திஹார் சிறையின் தமிழக போலீஸ் வட்டாரம் கூறும்போது, “சிறைக்குள்ளும் கண்ணய்யா தாக்கப்படலாம் என மத்திய மற்றும் மாநில உளவுத் துறையினர் சிறை நிர்வாகத்துக்கு எச்சரித்துள்ளனர். எனவே இங்கு வேறு எந்த கைதிக்கும் இல்லாத வகையில் அவருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது” என்றன.

கண்ணய்யா அடைக்கப் பட்டுள்ள அறைக் கதவுகள் ஒவ்வொரு முறையும் திறக்கப்படும் போது அவரை நேரடியாகக் கண்காணிக்க வேண்டி அங்கு இரு உயரதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சிறையின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான துரித நடவடிக்கைக் குழுவிடம் கண்ணய்யாவின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறை எண் 4-ல் வழக்கமான பாதுகாப்புடன் தற்போது கண்ணய்யாவுக்கென கூடுதலாக ஒரு ஜெயிலர், 2 கான்ஸ்டபிள்களும் 24 மணி நேரமும் சிறை வாயிலில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உணவு சோதனை

கைதிகளின் உணவை அவர்கள் உண்பதற்கு முன் சோதிக்கும் பாதுகாப்பு காவலர்களுக்கு பதி லாக, கண்ணய்யாவின் உணவை மட்டும் தலைமை மருத்துவ அதிகாரியே சோதித்து வருகிறார். இத்துடன் கண்ணய்யாவின் வழக்கு விசாரணை திஹார் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

திஹார் சிறையின் உட்புறப் பாதுகாப்பு பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் தமிழக போலீஸாருக்கு தற்போதைய தலைமை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் தீட்சித் பதவி வகிக்கிறார்.

SCROLL FOR NEXT