கோப்புப்படம் 
இந்தியா

பெகாசஸ் விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. மனு

ஏஎன்ஐ


பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்து, வழக்கறிஞர் எம்எல் சர்மா என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மார்க்சிஸ்ட் எம்.பி. தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

“ பெகாசஸ் உளவு மென்பொருள் அதிகாரபூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பிரிவு 19(1)(ஏ) அடிப்படை உரிமையான அந்தரங்க உரிமைக்கு எதிரானதாகும். புட்டாசாமி வழக்கில் அந்தரங்க உரிமையை இந்த நீதிமன்றம் வலியுறுத்திய நிலையி்ல் அந்த தீர்ப்பின் முகத்தில்அறைந்தது போன்றதாகும்.

தகவல்தொழில்நுட்பச் சட்டம், இந்திய தொலைத்தொடர்புச் சட்டம் ஆகியவற்றை மீறியதாகும் ஆதலால், இந்த விவகாரத்தில் உடனடியாக, சுயேட்சையான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் தீவிரமான குற்றச்சாட்டு எழுந்தபோதிலும்கூட மத்திய அரசு அதைப்பற்றிக் கவலைப்படாமல் விசாரணைக்கு உத்தரவிடாமல் இருக்கிறது. மத்திய அமைச்சர் வைஷ்னவ் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை, அதை மறுக்கவும் இல்லை.

மத்திய அமைச்சரின் கருதத்து தவிர்க்ககூடியதாக இல்லை. உளவு செயலை வடிவமைத்த இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தை சந்தேகத்திடமின்றி மத்திய அரசு ஒப்புக்கொள்கிறது.

தனது சொந்த அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர், தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள், சிபிஐ அதிகாரிகள், உச்ச நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவியல் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன்களை இடைமறித்து கேட்டதற்கான காரணத்தை விளக்குவது அவசியம்.

பெகாசஸ் உளவு மென்பொருள் இந்திய அரசால் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு ஏஜென்சியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை இந்திய அரசால் பெகாசஸ் உளவுமென்பொருள் பயன்படுத்தப்பட்டால் அது அதிகாரபூர்வமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளது.

அந்த மென்பொருளுக்காகச் செலவிடப்பட்ட தொகை அரசியல், தனிப்பட்ட நலனுக்காக ஆளும்கட்சி செய்ததை ஏற்க முடியாது. அல்லது வெளிநாட்டு ஏஜென்சி கண்காணித்திருந்தால், வெளிநாட்டு சக்திகள் இந்தியாவுக்குள் ஊடுருவிய அத்துமீறலாகும். இதை தீவிரமாகக் கையாளவேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT