உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கியான்வாபி மசூதியின் முன்பகுதி நிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பினரின் இப்பெரும் முயற்சியால் மசூதி தொடர்பான நிலப் பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் காசி எனும் வாரணாசியில் இந்துக்களின் புனிதத்தலமான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் கர்ப்பக்கிரக பகுதிக்கு முன்புறமாக ஒட்டியபடி முஸ்லிம்களின் கியான்வாபி மசூதி உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இந்த மசூதி கட்டப்பட்டதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. இதன் அடிப்படையில் இந்து தரப்பினரால், வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் நீதிமன்றம், “மாற்று மதத்தினரின் புனிதச் சின்னங்களை மாற்றி அமைத்தோ, அதன் இடிபாடுகள் உதவியினாலோ அல்லது அதை இடித்துவிட்டோ மசூதி கட்டப்பட்டுள்ளதா?” எனநேரடியாக ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்துக்கு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம்கள் தரப்பில் ஒரு பெரும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 7-ம் தேதி முடிவான ஒப்பந்தப்படி மசூதியின் முன்புறப் பகுதியின் 1,700 சதுர அடி நிலத்தை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு முஸ்லிம்கள் பரிசாக அளித்துள்ளனர்.
இந்த நிலம், பிரதமர் நரேந்திர மோடி யோசனையின் பேரில் கட்டப்பட்டு வரும் அக்கோயில் வளாகத்தின் காரிடர் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது அந்த நிலத்தில் கடந்த 1993 முதல் பாதுகாப்பு போலீஸாரின் கட்டுப்பாடு அறை உள்ளது. இதற்காக அந்த நிலம் வாரணாசி மாவட்ட நிர்வாகத்துக்கு மசூதி தரப்பில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
நிலம் பரிசளித்த முஸ்லிம்களின் நற்செயலை மதிக்கும் வகையில் இந்துக்கள் தரப்பிலும் காசி விஸ்வநாதர் கோயிலின் 1000 சதுர அடி நிலம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. எனினும், முஸ்லிம்கள் அளித்த 1,700 சதுர அடி நிலம் மசூதியின் முக்கிய முன்பகுதி ஆகும். இதற்காக இந்து-முஸ்லிம் மனுதாரர்கள் தரப்பில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த தகவல் வெளியானால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில் நிலத்தை அளிக்க முஸ்லிம்கள் எடுத்த முடிவால், மசூதி நிர்வா கத்தால் முறையான பதிவுக் கட்டணமாக ரூ.2 லட்சத்து 29,000 நிலப்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு வாரணாசி சிவில் நீதிமன்ற அனுமதியுடன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஜுலை 27-ல் வரவுள்ளது. முஸ்லிம்களின் இந்த நல்முயற்சியால் பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த நிலப்பிரச்சினை முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.