கர்நாடகாவில் கடந்த இரு தினங்களாக உத்தர கன்னடா, தக்ஷின கன்னடா, ஷிமோகா, குடகு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இரவு பகலாக கனமழை கொட்டி தீர்ப்பதால் கிருஷ்ணா, காவிரி, துங்கபத்ரா, கபிலா உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மடிகேரி - தலக்காவிரி இடையேயான பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தின் காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கேரளாவின் வயநாட்டிலும் கனமழை தொடர்வதால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைமுழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 106.65 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 31 ஆயிரத்து 896 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரத்து 492 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2283.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரத்து 179 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 33 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர்திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள2 ஆயிரத்து 292 கனஅடி நீர்கால்வாய்கள் மூலம் மைசூரு,மண்டியா மாவட்ட விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேகேதாட்டு, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.