‘‘மும்பை விமான நிலையம், கப்பற் படை விமான தளத்தை தகர்க்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.யும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்களும் விரும்பினர்’’ என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 10 தீவிரவாதி கள் மும்பையில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாகி னர். மும்பை தாக்குதலுக்கு மூளை யாக செயல்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார். மும்பை தாக்குதல் வழக்கில் இவர் அப்ரூவ ராக மாறி சிறையில் இருந்தபடியே மும்பை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார்.
அதன்படி நேற்று வெள்ளிக் கிழமை ஹெட்லி அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:
மும்பையில் 26/11 தாக்குதலின் போது மும்பை விமான நிலையம், கப்பற்படை விமான தளம் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, லஷ்கர் தீவிரவாத தலைவர்கள் விரும்பினர். ஆனால், அந்த இடங்கள் தேர்வு செய்யப்பட வில்லை. அதனால் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் இக்பால் மகிழ்ச்சி அடையவில்லை.
மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு சென்று அந்த பகுதி களை வீடியோ எடுத்தேன். அந்த ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் யாராவது ஒருவரை ஐஎஸ்ஐ.க்காக வேவு பார்க்க ஆள் சேர்க்கும்படி மேஜர் இக்பால் என்னிடம் கூறினார். பின்னர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எடுத்த வீடியோவை தீவிரவாதி சாஜித் மிர், மேஜர் இக்பாலிடம் வழங்கினேன்.
மும்பைக்குள் 10 தீவிரவாதிகள் ஊடுருவ கேட்வே ஆப் இந்தியா பகுதியை லஷ்கர் கமாண்டர் ஜாகியூர் ரஹ்மான் தேர்வு செய்தார். அந்தப் பகுதிதான் தாஜ் ஓட்டலுக்கு அருகில் உள்ளது என்று அவர் கூறி னார். அந்த பகுதிக்குள் நுழைய வேண்டுமானால், கப்பற்படை தளங் களை தாண்டிச் செல்ல வேண்டும். அதனால் சிக்கி கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று நான் கூறினேன்.
ஆனால், மும்பை கப்பி பரேட் பகுதியில் உள்ள பத்வார் பார்க்கில் 10 தீவிரவாதிகள் நுழைய வேண் டும் என்று நான் முடிவு செய்தேன். ஏனெனில், அந்தப் பகுதிதான் குடிசைப் பகுதிகள் நிறைந்தது. முக்கிய சாலையில் இருந்து மிக அருகில் உள்ளது. நான் கூறிய இந்த யோசனையை ரஹ்மான் உட்பட எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.
எந்தெந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நான் தேர்வு செய்திருந்த இடங்களை ரஹ்மான் பார்த்தார். ‘‘இந்த தாக்குதலை சரி யாக முடிக்க வேண்டும். பாகிஸ்தா னில் இந்தியா செய்துள்ள வெடி குண்டு தாக்குதலுக்கு இது பழிவாங் கும் வகையில் இருக்க வேண்டும்’’ என்று கூறிய ரஹ்மான் எனக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார். அதன் பின், 10 தீவிரவாதிகளும் 2 பிரிவாக பிரிந்து தாக்குதல் நடத்தினர்.
சிவசேனா தலைவரை கொல்ல சதி
சிவசேனா கட்சியுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தேன். சிவசேனா உறுப் பினரிடம் நன்கு பழகி, அவர் மூலம் அக்கட்சியின் தலைவர்களை சந்திக் கவும், அதன்பிறகு சேனா பவன் மற்றும் சிவசேனா தலைவர்களை படுகொலை செய்யவும் திட்டமிட் டோம். இப்படி செய்தால், ஐஎஸ்ஐ, லஷ்கர் தலைவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்தோம்.
மும்பை 26/11 தாக்குதலுக்கு முன்பு லஷ்கர் அமைப்பின் தலைவர் ஜாகியூர் ரஹ்மான் லக்வி, சாஜித் மிர், அபு காபா, அப்துல் ரஹ்மான், மேஜர் இக்பால் ஆகி யோரை பல முறை சந்தித்து தாக்கு தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்.
கடந்த 2008-ம் ஆண்டு தாக்குதலுக்கு முன்னர் கடைசியாக நான் மும்பை சென்றேன். அப்போது, தெற்கு மும்பையில் உள்ள சாபாத் ஹவுஸை வீடியோ எடுத்தேன். அங்கு யார் வசித்தனர் என்ற விவரம் எனக்கு தெரியாது. அந்த இடத்தை வீடியோ எடுக்கும்படி சாஜித் மிர் மற்றும் பாஷா ஆகியோர் கூறினர். அந்த பகுதியில் யூதர்கள், இஸ்ரேலி யர்கள் அதிகம் வசிப்பதாக கூறினர்.இவ்வாறு ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.