பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் நாட்டையே உலுக்கி எடுத்துவரும் நிலையில், அலுவலகப் பணி நேரத்தில் குறைந்த அளவே செல்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, நாடாளுமன்றத்தில் நாள்தோறும் புயலைக் கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், அதிகாரிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் பொது நிர்வாகத்துறை (சிஏடி) அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''மகாராஷ்டிர அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அலுவலகங்களில் அலுவல் பணிக்கு செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு, லேண்ட்லைன் மூலம் தகவல் தொடர்பை அதிகப்படுத்த வேண்டும்.
செல்போனில் பேசும்போது மிகவும் கனிவான குரலில் பேச வேண்டும். மற்றவர்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரியாத வகையில், கவனத்துடன் பேசவேண்டும். செல்போனில் வாக்குவாதம் செய்வதோ, சத்தமிட்டுப் பேசுவதோ, நாகரிகக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ கூடாது.
செல்போன்கள் மூலம் சமூக ஊடகங்களை அலுவலக நேரத்தில் பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட அழைப்புகள் ஏதும் செல்போன்களில் வந்தால், அதை அலுவலகத்துக்குள் பேசாமல், அலுவலத்துக்கு வெளியே சென்று பேசிவிட்டு வரவேண்டும்.
எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து செல்போன் அழைப்புகள் வந்தால், அதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். வேறு ஒரு அழைப்பில் இருந்தாலும், அந்த அழைப்பை ரத்து செய்துவிட்டு உயர் அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
அலுவலக ரீதியாகக் கூட்டம் நடக்கும்போதோ, அல்லது உயர் அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும்போதோ, கூட்டத்தில் பங்கேற்கும்போதோ செல்போன் சைலன்ட்டில் இருக்க வேண்டும். இதுபோன்ற கூட்டத்தில் பங்கேற்கும்போது, இன்டர்நெட் இணைப்பைப் பரிசோதித்தல், மெசேஜ் பார்த்தல், ஹெட்போன் போடுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
மாநில அரசின் தோற்றம், நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதை அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும்''.
இவ்வாறு மகாராஷ்டிர அரசின் பொது நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.