அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், கடந்த ஜூலை 14-ம் தேதி அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி மருந்துகளை விரைவாக இந்தியாவுக்கு சப்ளை செய்வது தொடர்பாக அந்நாட்டின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மக்களவை யில் விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை வெளி யிடவில்லை. 30 லட்சம் முதல் 40 லட்சம் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் அமெரிக்காவிடமிருந்து எதிர் பார்ப்பதாக தெரிவித்தார். அதேசமயம் வர்த்தக ரீதியில் இறக்குமதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்தப்படுகிறதா என்ற விவரத்தையும் அவர் வெளியிடவில்லை. உலகம் முழுவதும் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் (கோவாக்ஸ்) ஒரு பகுதியாக 8 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறுகையில், மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்வது தொடர்பாக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பூசிகளை இலவசமாக வழங்கினாலும், அதன் பின் விளைவுகள் தொடர்பாக எந்த சட்ட வழக்குகளும் தொடரக் கூடாது என்பதில் ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. அதற்கு இந்திய அரசு உறுதி அளிக்கும்பட்சத்தில் தடுப்பூசி மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்ப முன் வருவதாக அவை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.