எல்.முருகன்- கோப்புப் படம் 
இந்தியா

கரோனா ஊரடங்கின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: எல்.முருகன் நாடாளுமன்றத்தில் பதில்

செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது கால்நடை பராமரிப்பு, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகம் எடுத்தது.

பொதுமுடக்கத்தின் போது விலக்களிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் மீன்கள் மற்றும் இறால்களை சேர்க்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் மீன்வளத்துறை அறிவுறுத்தியது.

நீடித்த மற்றும் பொறுப்பான நடவடிக்கைகளின் மூலம் மீன்வளத் தொழிலை மேம்படுத்தி நீலப்புரட்சி உருவாக்குவதற்காக பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தை மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது. தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக 2020-21 முதல் 2024-25 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூபாய் 20,050 கோடி முதலீட்டில் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

கால்நடை தீவனத்தை மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதற்கான தளர்வுகள் குறித்து 2020 மார்ச் 26 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. கால்நடை மருத்துவ சேவைகளை அத்தியாவசிய சேவைகள் பிரிவில் சேர்க்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தினசரி பிரச்சினைகள் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் தீர்க்கப்பட்டன. பால்வளத் துறையின் மீது கோவிட் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு ரூபாய் 203 கோடி மதிப்பில் பால்வளத்துறைக்கான வட்டி கழிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேரிடர் மேலாண்மைக்கான அடிப்படை பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே உள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிவாரணத்தை மீனவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசுகள் வழங்குகின்றன. மேற்கொண்டு உதவிகளை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்குகிறது.

அம்பன் டவுக்டே மற்றும் யாஸ் புயல்கள் தாக்கியபோது, மத்திய அரசு அமைத்த அமைச்சரவை குழுக்கள், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் டாமன் & டையுவில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டன. இதைத்தொடர்ந்து பல்லாயிரம் கோடி மதிப்பீட்டிலான உதவிகள் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் பிரதமர் அறிவித்தவாறு, ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்பிலான கூடுதல் தொகைகளும் வழங்கப்பட்டன.

இது தவிர, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2021-22 ஆண்டின் மத்திய அரசின் முதல் தவணையாக ரூ 8873.60 கோடியை 2021 ஏப்ரல் 29 அன்று மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது.

மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மீன்வளத் துறை, மீன்வளத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் மீனவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT