இந்தியா

‘‘தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என பிரதமர் மோடி பலமுறை கூறி விட்டார்’’- மாண்டவியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடி பலமுறை கூறி விட்டார், இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா கூறினார்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 43.87 கோடிக்கும் அதிகமான (43,87,50,190) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 71,40,000 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட உள்ளன.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 41,12,30,353 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

2.75 கோடிக்கும் அதிகமான (2,75,19,837) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

எனினும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து பல மாநில அரசுகள் புகார் கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதனை மறுத்து வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா மக்களவையில் கூறியதாவது:

நாடுமுழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உறுதியாக உள்ளோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும். இந்த இலக்கை எட்டுவதற்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் சிலர் தடுப்பூசி விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர்.

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடி பலமுறை கூறி விட்டார். எனவே இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து கரோனா தடுப்பூசி வேகமாக செலுத்தப்படுவதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT