தெலங்கானா மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இங்குள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பிவருகின்றன. இதைத் தொடர்ந்துதெலங்கானாவில் அணைகளில்அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ளமக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால், இவ்விரு மாநிலங்களிலும் அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
தெலங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம் சாகர் அணையின் கொள்ளளவு 90 டிஎம்சி ஆகும். இந்த அணையில் 81.696 டிஎம்சி வரை தண்ணீர் நிரம்பியதால் நேற்று மாலை அணையிலிருந்து 8 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதேபோன்று நாராயணரெட்டி அணையும் நிரம்பியதால் இதிலிருந்து 7 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆந்திராவிலும் தொடர்மழை காரணமாக ஸ்ரீசைலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் உள்ள நீராதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தெலங்கானா முதல்வர் ஆலோசனை
கோதாவரி மாவட்டங்களில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்ததால், பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை தொடர்பாக தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அனைத்து துறை அதிகாரிகளிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆறுகளின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும், முன்னெச்சரிக்கை பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் உத்தரவிட்டார்.