கர்நாடகாவில் குடகு மாவட்டத் திலும், கேரளாவில் வயநாட்டிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்ததால், காவிரி மற்றும் கபிலா ஆகிய இரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கபிலா ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2283.80 அடியாக உயர்ந்தது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 102.65 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2,ஆயிரத்து 292 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 9 ஆயிரத்து 316 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்துக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.