மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் உள்ள டேவிட் ஹெட்லி இன்று (திங்கள்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, மும்பையில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் 10 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்166 பேரை பலி கொண்டது. இச்சம்பவத்தில் பலியானவர்களில் அமெரிக்கர்களும் அடங்குவர்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக டேவிட் ஹெட்லி என்ற நபரை அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க சிறையில் உள்ள டேவிட் ஹெட்லி இன்று (திங்கள்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். காலை 7.30 மணிக்கு வாக்குமூலம் அளிக்கத் துவங்கினார்.
மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாற ஹெட்லி விருப்பம் தெரிவித்ததையடுத்து அவர் வாக்குமூலம் அளிக்க மும்மை நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி இன்று நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார்.
ஹெட்லி வாக்குமூலத்தில் 10 முக்கிய தகவல்கள்
1.லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையது உந்துதலின் பேரிலேயே நான் அந்த இயக்கத்தில் இணைந்தேன்.
2. நான் 2002-ல் லஷ்கர் இயக்கத்தில் இணைந்தேன். பாகிஸ்தானின் முசாபர்பாத்தில் பயிற்சி மேற்கொண்டேன்.
3.லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த சாஜித் மிர் எனக்கு அறிமுகமானார். மும்பை தாக்குதல் தொடர்பாக அவருடன் தொடர்பில் இருந்தேன். (சாஜித் மிர்ரும் மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி)
4.சாஜித் மிர், மேற்கத்திய நாடுகளில் இருந்து புதிதாக லஷ்கர் இயக்கத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்தார்.
5.அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய பெயரை மாற்றிக் கொண்டேன். 2006-ம் ஆண்டு தாவூத் கிலானி என்ற பெயரை டேவிட் ஹெட்லி என மாற்றிக் கொண்டேன்.
6.2008 நவம்பர் 26 சம்பவத்துக்கு முன்னர் 2 முறை மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே 10 தீவிரவாதிகள் தான் தாக்குதலுக்கு முயன்றனர்.
7.மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முன்னதாக 8 முறை இந்தியா வந்து சென்றேன். 7 முறை பாகிஸ்தானிலிருந்து நேரடியாக மும்பை வந்தேன்.
8.இந்தியாவிடம் விசா கேட்டு விண்ணப்பித்த போது அளித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.
9.பாகிஸ்தானின் லாண்டி கோடல் பகுதியில் நான் கைது செய்யப்பட்டேன். வெளிநாட்டினருக்கு அப்பகுதியில் அனுமதி இல்லை என்பதால் நான் கைதானேன்.
10. ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பினர் என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தியாவில் ரகசிய வேவு பார்ப்பதற்கு என்னை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டனர்.
இவ்வாறாக பல தகவல்களை ஹெட்லி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் வரை வாக்குமூலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.