இந்தியா

டெல்லி செல்கிறேன்; பிரதமரை நேருக்கு நேர் சந்திக்கிறேன்: மம்தா பானர்ஜி

செய்திப்பிரிவு

டெல்லி செல்கிறேன்; பிரதமரை சந்திக்கவிருக்கிறேன் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

அடுத்த வாரம் டெல்லி செல்கிறேன். அப்போது பிரதமரை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறேன். பிரதமர் மோடி சந்திக்க நேரம் கொடுத்துள்ளார்.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் 1972ல் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர்கேட் ஊழலைவிட மிகப்பெரியது. அத்துடன், ஊடகங்கள் மீதான இன்றைய ஐடி ரெய்டும் இணைந்துள்ளது. இது நாட்டில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' நிலையை உருவாக்கியுள்ளது.

டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் மீதும் ஊடக நிறுவனங்களின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒருபுறம் ஐடி ரெய்டு மறுபுறம் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம். இது மிகவும் ஆபத்தானது.

எல்லா அமைச்சரவையும் பெகாசஸ் ஒட்டுகேட்பு இயந்திரமாக மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு அதன் அமைச்சர்கள் மீதே நம்பிக்கை இல்லை. ஊடகவியலாளர்கள் போன்கள் ஒட்டுகேட்கப்படுகிறது.

எனது தொலைபேசியையும் விட்டுவைக்கவில்லை. இன்று டைனிக் பாஸ்கர் பத்திரிகையை குறிவைத்துள்ளனர். அந்தப் பத்திரிகை, மோடியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்தது, பெகாசஸ் பற்றி வெளிப்படையாக செய்திகளை வழங்கியது.

அதனால் இன்று அந்த செய்தி நிறுவனம் குறிவைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் ஊடகங்களின் குரல் நெறிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT