கரோனா 2-வது அலையின்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு எதிராக மாநிலங்களவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினோய் விஸ்வம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தபோது, “கரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.
சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தமைக்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிபிஐ எம்.பி. பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார், கடந்த 20-ம் தேதி 243-வது கேள்விக்கு அளித்த பதிலில் இந்தியாவில் கரோனா 2-வது அலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மாநிலத்திலும் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது. மத்திய அரசு தனது பதிலின் மூலமும், அரசைத் தவறாக வழிநடத்தி, நாடாளுமன்றத்தின் சிறப்பை மீறிவிட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்கள் ஏராளமாக வந்தன. ஏராளமான மக்கள் தங்கள் அனுபவங்களைத் தெரிவித்தவை இதற்குச் சான்றாகும்.
ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டதையடுத்து, ஆக்சிஜன் சப்ளையைச் சீராக வழங்கக் கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றங்களிலும மக்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றமும் தலையிட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்ய உத்தரவிட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த கணக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
இது முழுமையாக நம்பகத்தன்மையில்லாதது. அவையையும், நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்த முயல்வதாகும். இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கை அவசியம். ஆதலால், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸாக இதை எடுத்து விசாரிக்க வேண்டும்”.
இவ்வாறு சிபிஐ எம்.பி. பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார்.