இந்தியா

‘பெகாசஸ்’ மூலம் உளவு பார்த்தது குறித்து 28-ம் தேதி சசிதரூர் தலைமையில் நிலைக்குழு ஆலோசனை

செய்திப்பிரிவு

பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் செல்போன் பேச்சுகள் உளவு பார்க்கப் பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் என்.எஸ்.ஓ. என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் 50-க்கும் மேற்பட்டநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர் கள் மற்றும் ஆயிரக்கணக்கான தனி நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாஷிங்டன் டைம்ஸ், தி வயர் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனால் உலக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், தேர்தல் வியூகர்பிரசாந்த் கிஷோர், இரண்டு மத்திய அமைச்சர்கள், திரிணமூல்காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட அரசியல்வாதிகளின் செல்போன்களும், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் செல்போன்களும் மத்திய அரசால் உளவு பார்க்கப்பட்டதாக தெரிகிறது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளி யில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் முடங்கின. இதனிடையே, எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்ட மாக மறுத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு (தகவல் தொழில் நுட்பம்) வரும் 28-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. அப்போது, செல்போன் உளவு பார்க் கப்பட்டது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளிடம் அந்தக் குழு விசாரணை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு சசிதரூர் அளித்த பேட்டியில், “பெகாசஸ் உளவு விவகாரம் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவுபார்க்கப்பட்டிருப்பது நிரூபண மாகியுள்ளது. இந்த உளவு விவகாரத்தில் தங்களுக்கு சம்பந்தமில்லை என இந்திய அரசு கூறினால், வேறு எந்த நாட்டு அரசுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்தாக வேண்டும். அப்படி இருந்தால், அது மிக மிக தீவிர பிரச்சினையாக மாறும்’’ என்றார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT