கரோனாவில் உயிரிழந்த ஒருவர், அவரின் உயிரிழப்புக்கான காரணத்தை தெரிவிக்கவோ, குறிப்பிடவோ மத்திய அரசு டெல்லி அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய சுகதாாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்றுப் பேசுகையில் “ கரோனா 2-வது அலையின் போது, உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் குறைத்துக் காட்டுங்கள் என்று மாநிலங்களுக்கு எந்தவிதமான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை.
எங்களிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும், மாநில அரசுகள் அனுப்பியவைதான். மாநிலஅரசுகள்தான், கரோனா உயிரிழப்பை பதிவு செய்துள்ளன. மத்திய அரசின் பணி என்பது, மாநில அரசுகள் வழங்கும் புள்ளிவிவரங்களைப்பதிவு செய்வதுதான், வேறு ஏதும் இல்லை.
அதிகமான பரிசோதனை செய்யுங்கள், உயிரிழப்பை பதிவு செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தொடர்ந்து மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வந்தார் என்பது நினைவிருக்கட்டும்.ஆதலால், உயிரிழப்பை மறைக்க எந்த காரணமும் இல்லை, யாரைக் குற்றச்சாட்டுகிறீர்கள் எனத் தெரியவில்லை. உயிரிழப்பை யார் பதிவு செய்தது. மாநில அரசுகள்தானே. புள்ளிவிவரங்களை யார் அனுப்பியது, மாநிலங்கள்தானே. மத்திய அரசின் பணி, மாநில அரசுகள் தரும் விவரங்களை பதிவு செய்வது மட்டும்தான்” எனத் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா பேச்சுக்கு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கண்டனம் தெரிவித்து மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மணிஷ் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ கரோனா 2-வது அலை ஏற்பட்டபோது ஆக்சிஜன் பற்றாக்குறை டெல்லியில் ஏற்பட்டது உண்மைதான். கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே, மூடி மறைக்கும் வேலையைத்தான் மத்திய அரசு செய்து வந்தது. ஏனென்றால் மத்திய அரசின் தவறான கொள்கைகள், அதை செயல்படுத்தியவிதம், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்ட சூழல் ஆகியவற்றால் மத்திய அரசு மூடிமறைக்கும் வேலையில்தான் இருந்தது.
கரோனாவில் ஒருவர் உயிரிழந்தால், அவர் எவ்வாறு உயிரிழந்தார், அதற்குரிய காரணம் என்ன என்று தெரிவிக்க டெல்லி அரசு விரும்பியது, அதை பதிவு செய்யவும் விரும்பியது. இதற்காக கரோனா உயிரிழப்பு தணிக்கைக் குழு உருவாக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தங்களின் தவறுகள் வெளிவருவதை விரும்பவில்லை. கரோனா உயிரிழப்புக்கான காரணத்தை புள்ளிவிவரத்தில் குறிப்பிடவும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. நாங்கள் உருவாக்கிய குழுவுடன் மத்தியக் குழுவும் பயணி்த்தால் எந்தமாதிரியான உண்மை வெளிவரும் என அவர்களுக்குத் தெரியும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.