முககவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது, ஆனால் 5 மாநில தேர்தலின்போது செய்தது என்ன என மாநிலங்களவை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
நாடுமுழுவதும் கரோனா பரவல் மற்றும் அதனை தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
நாடுமுழுவதும் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா போராளிகளுக்கு எனது மரியாதை செலுத்துகிறேன். மற்றவர்களுக்கு ஆக்சிஜன் விநியோகம், பிளாஸ்மா தானம் செய்து உதவியர்களுக்கு தலை வணங்குகிறேன்.
பாத்திரங்களை தட்டச் சொல்லியும், மெழுகுவர்த்தியை ஏத்தச் சொல்லியும் மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். ஆனால் பழியை தான் ஏற்றுக்கொள்ளாமல் முன்னாள் சுகாதாரத்தறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் மீது போட்டு விட்டார்.
முககவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் 5 மாநில தேர்தல் நேரத்தில் என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் வகுத்த விதிமுறைகளை நீங்களே மீறுகிறீர்கள். கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாததற்காக பாராட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.