இந்தியா

கரோனா; பக்ரீத் பண்டிகையில் புதியக் கட்டுப்பாடுகள்: உ.பி. முதல்வர் யோகி அறிவிப்பு

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவலுக்காகப் பக்ரீத் பண்டிகையில் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலங்குகள் பலி கொடுப்பது உள்ளிட்டவற்றில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இதை அறிவித்துள்ளார்.

நாளை நாடு முழுவதும் 'ஈத் உல் அஸா' எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆடு, மாடு, எருமை மற்றும் ஒட்டகங்கள் பலி கொடுக்கப்படும். இப்பண்டிகைகாக உத்தரப்பிரதேசத்தில் புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, கரோனா பரவலை தடுக்கும் பொருட்டாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து எடுத்துள்ளார். இதன் மீதான அறிவிப்பு உ.பி. அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

"50 பேர்களுக்கும் அதிகமாக பொதுமக்கள் எங்கும் கூடக் கூடாது. பொது இடங்களில் விலங்குகளை பலி கொடுக்கக் கூடாது. உ.பி.யில் தடை செய்யப்பட்டவையான மாடு மற்றும் ஒட்டகம் உள்ளிட்ட விலங்களை பலி கொடுக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட மற்றும் தமது வீடுகள் தவிர மற்ற இடங்களில் பலிகள் அளிக்க அனுமதி இல்லை.

பலி கொடுத்த பின் அந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்காகப் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி கொடுக்கும் படக் காட்சிகளுக்கு தடை

இந்நிலையில், உ.பி.யின் முக்கிய மவுலானாக்களில் ஒருவரான காலீத் ரஷீத் ஃபிரங்கி மெஹலியும் முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் அவர், உ.பி. அரசால் தடைசெய்யப்பட்ட விலங்குகளை பலி கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும், பலி கொடுக்கும் படக்காட்சிகளையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT