மத்திய அரசின் மீன்வள மசோதா மீது மீனவர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி அச்சத்தை போக்க வேண்டும் எனக் கோரப்படுள்ளது. இதற்காக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை ராமநாதபுரம் எம்.பி.யான கே.நவாஸ்கனி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன்வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை நீக்க அவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி மீனவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் கோரப்படுகிறது.
இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், எம்.பி.யுமான கே நவாஸ்கனி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை சந்தித்தார். அப்போது தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்தார்.
அமைச்சர் ரூபாலாவிடம் நவாஸ்கனி அளித்த கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது: இந்த சட்டத்தின்படி மீனவர்கள் ஐந்து கடல் மைல்கள் தாண்டி 12 கடல் மைல் தொலைவிற்குள் தான் மீன் பிடிக்க வேண்டும்,
இதில் மீனவர் பதிவுகள், உரிமம் வழங்குதல் போன்றவை மீன்வளத்துறையிடமிருந்து பறித்து கடலோர காவல்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் உள்ளது. விதிமீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் வலைகள் பறிமுதல் செய்வதுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சட்டத்தின் மூலம் 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்துடன் மீன் பிடிக்கின்ற ஒவ்வொரு படகும் மீன் பிடிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இது மீனவர்களை வெகுவாக பாதிக்கும் என தமிழ்நாடு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவைகளால் பொருளாதார நெருக்கடியில் மீனவர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
மீனவர்களை இச்சட்டம் கூடுதலாக பாதிக்கும் என்றும் தண்டனை அபராதம் கைது பறிமுதல் போன்ற நடவடிக்கைகளால் மீனவர்கள் அச்சம் கொள்வதாகவும் தொடர்ந்து கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு முன் முழுமையான மற்றும் முறையான மீனவர்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு மீனவர்களின் அச்சங்களை நீக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அம்சங்களை நீக்கி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.