ஆபாச படங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
ஆபாச படங்களைத் தயாரித்து அதை செயலியில் வெளியிட்டு பணம் சம்பாதித்தாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களை தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று நேரில் விசாரணைக்குச் சென்ற ராஜ் குந்த்ராவை விசாரணையின் முடிவில் போலீஸார் கைது செய்தனர். அதன்பின் இன்று அதிகாலை மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ராஜ் குந்த்ரா அழைத்துத் செல்லப்பட்டு அதன்பின் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆபாச படங்களை தயாரித்தது, அதை விற்பனை செய்தது, செயலி உருவாக்கியதில் ஏராளமான பங்கும் குந்த்ராவுக்கு இருந்துள்ளது, அதற்கான ஆதாரங்களும் கிடைத்ததையடுத்து, ராஜ் குந்த்ராவை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மும்பை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் “ 2021, பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீஸார், ஆபாச படங்கள் எடுத்தது, செயலி தயாரித்தது, விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி, ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், வெப் சீரிஸ் தொடர் எடுக்கப் போகிறேன் எனக் கூறி ஏராளமான பெண்களை நடிக்க அழைத்து, அவர்களை படிப்படியாக பாலியல் படங்களில் நடக்க ராஜ் குந்த்ரா கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.
இந்தப் புகாரையடுத்து, சமீபத்தில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள மாலத், மாத் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பாலியல் படங்கள் எடுக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, அங்கு ரெய்டு சென்ற போலீஸார் 5 பேரைக் கைது செய்தனர்.
இந்த ரெய்டில் இயக்குநர் ரோவா கான், புகைப்படக் கலைஞர் மோனு சர்மா, இயக்குநர் பிரதிபா நலாவாடே, இரு நடிகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.