பெகாசஸ் மென்பொருள் மூலம்ஒட்டு கேட்பது அரசியல் சாசனஉரிமைக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக மாநிலங் களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, “அரசே உளவு வேலையில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும்தீவிரமான பிரச்சினை. இது குடிமக்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது. அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் ஆகும். அனைத்தையும் சரிபார்க்கவேண்டும் என்று கூறி அரசு தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும்” என்றார்.
நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பினோய் விஸ்வம் கூறும்போது, “இந்தியாவை அரசின் கண்காணிப்பு கொண்ட நாடாக பாஜக மாற்றி வருகிறது. தங்கள் சொந்த அச்சங்களில் இருந்து விடுபட பாசிஸ்ட்கள் எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை பாசிசத்தின் வரலாறு கூறுகிறது” என்றார்.
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறும்போது, “பெகாசஸ் மென்பொருள் பயன்பாடு சட்டப்பூர்வ ஒட்டுகேட்பு அல்ல. தனிநபர்கள் செய்திருந்தாலும் அல்லது அரசு செய்திருந்தாலும் அது குற்றமாகும். மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தின் சேவை பெறப்பட்டதா என அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.