இந்தியா

புதிய அமைச்சர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கோஷம்; பிரதமர் மோடி கண்டிப்பு: மக்களவை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த சாதாரண மக்கள் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர், ஆனால் இது சிலருக்கு பிடிக்காமல் அறிமுக நிகழ்ச்சியில் கூட இடையூறு செய்கின்றனர் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

17-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் 20அமர்வுகளை ஆகஸ்ட் 13-ம் தேதிவரை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 17 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதில் 3 மசோதாக்கள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் வந்தார். உள்ளே செல்லும் முன்பு நாடாளுமன்றத்தின் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர் என பிரதமர் மோடி கூறினார்.

பின்னர் நாடாளுமன்றம் சென்ற அவர் கூட்டத்தில் பங்கேற்றார். மக்களவை இன்று காலை கூடியதும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி. விஜய் வசந்த் உட்பட 4 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டர்.


பின்னர் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பிறகு புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை அவையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘நாடாளுமன்றத்தில் புத்துணர்ச்சி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பெண்கள், தலித், பழங்குடியிடி சமூகத்தினர் அதிகஅளவில் அமைச்சர்களாகியுள்ளனர். விவசாயம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தற்போது அமைச்சர்களாகியுள்ளனர்’’ எனக் கூறினார்.

அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ‘‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இந்த நாட்டின் சாதாரண மக்கள் இன்று அமைச்சர்களாகியுள்ளனர். ஆனால் இது சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் புதிய அமைச்சர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கூட இடையூறு செய்கின்றனர்’’ எனக் கூறினார்.

பிரதமர் மோடி புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்யும்போது அவையில் கோஷம் எழுப்பியதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கடுமையாக கண்டித்தார். ஆனால் அவையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT