பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் குறித்து விமர்சித்ததற்கு நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்ரீந்தர் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பஞ்சாபில் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. ஆட்சி குறித்தும் முதல்வர் அம்ரீந்தர் சிங் குறித்தும் சித்து விமர்சனம் செய்தார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், உட்கட்சி மோதலுக்கு முடிவு கட்டும் முயற்சியாக மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிப்பது என்றும் அம்ரீந்தர் சிங் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் கட்சி மேலிடம் முடிவு செய்தது. மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிப்பதற்கு அம்ரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவிக்கிறார். தன்னைப் விமர்சித்ததற்காக சித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனால், காங்கிரஸ் மேலிடத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில், அம்ரீந்தர் சிங் ஆதரவு எம்எல்ஏ சுக்பால் கைரா மற்றும் அம்ரீந்தர் சிங் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 10 பேர் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘‘பொற்கோயிலில் ராணுவ நடவடிக்கை மற்றும் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு பின் பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர அம்ரீந்தர் சிங் முக்கிய காரணமாக இருந்தார். காங்கிரசுக்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். பொது வெளியில் காங்கிரஸ் அரசு குறித்தும் முதல்வர் அம்ரீந்தர் சிங் குறித்தும் சித்து விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. இதனால், கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்காக சித்து மன்னிப்புக் கோர வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர்.