இந்தியா

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 40 கோடி பேருக்கு தடுப்பூசி: மத்திய சுகாதாரத் துறை தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் பெருந்தொற்றின் மூன்றாம் அலை வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநிலஅரசுகள் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. இதன் ஒருபகுதியாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 46.38 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண் ணிக்கை 40.44 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கரோனா நோயாளிகளுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறுகையில், “ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவதால் அவர்களை கருப்பு பூஞ்சை தாக்குவதை போலவே, காசநோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், கரோனா நோயாளிகள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை” என்றனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41,157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 517 ஆக குறைந்துள்ளது என்றுமத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT