திருப்பதி மாநகராட்சி அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரகாஷ் காரத் பேசியதாவது:
ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர் ஆகிய 4 ராயலசீமா மாவட்டங்கள் மிகவும் பின் தங்கி உள்ளன. இப்பகுதியை சேர்ந்த 6 முதல்வர்கள் ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்தபோதிலும் இப்பகுதி வளர்ச்சி அடையவில்லை.
மழையை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. ஆதலால், தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திருப்பதியில் பஸ் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. ராயலசீமா பகுதி வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறப்பு நிதியின் கீழ் ஆண்டுக்கு ரூ. 4,000 கோடி வழங்க வேண்டும்.
சமீப காலமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு கம்யூனிஸ்ட்டுகளை தேசத் துரோகிகளாக சித்தரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை மக்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா பேசும்போது, “ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கண்ணய்யா குமார் மீது தேசத் துரோக வழக்கு பதிவாகி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கண்ணய்யா குமார் பேசிய வீடியோ காட்சிகள் ‘மார்பிங்’ செய்யப்பட்டுள்ளன. அவர் பேசியதில் ஒரு வார்த்தையாவது தேசத்துக்கு எதிராக இருந்தால் நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்ள தயார்” என்றார்.