டெல்லியில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் பங்கேற்க வந்திருந்த காட்சி | படம் ஏஎன்ஐ 
இந்தியா

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த அரசு தயார்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

பிடிஐ

நாடாளுமன்றத்தில்ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு அரசு தயாராக இருக்கிறது, எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (19 ஆம் தேதி) தொடங்குகிறது, ஆகஸ்ட் 13 ஆம் தேதிவரை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தை சுமூகமாக நடத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக்கூட்டத்தில் 33 கட்சிகளைச் சேர்ந்த 40 தலைவர்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும், மாநிலங்களவை ஆளும்கட்சித் தலைவருமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன், திமுக எம்.பி. திருச்சி சிவா, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஸ் மிஸ்ரா, அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல், லோக்ஜனசக்தி தலைவர் பசுபதி பராஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள், பிரச்சினைகள் குறித்து விதிமுறைப்படி, நடைமுறையின்படி ஆரோக்கியமான,அர்த்துள்ள விவாதங்களை நடத்த அரசு தயாராக இருக்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அனைத்து தரப்பின் ஆலோசனைகள், குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள், அறிவுரைகள் வரவேற்கப்படுகிறது, அது சரியாக இருந்தால் பரிசீலிக்கப்படும். நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஒரு விவகாரத்தை, விஷயத்தை எழுப்பினால் அதுகுறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்” எனத் தெரிவித்தார்.

மழைக்காலக் கூட்டத்தில் மத்திய அரசு 17 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. அதில் 3 மசோதாக்கள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசர ச்சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டவை.

இந்தக் கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கரோனா 2-வது அலையை மத்திய அ ரசு கையாண்ட விதம், தடுப்பூசி பற்றாக்குறை, தேசதுரோக சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து , விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

SCROLL FOR NEXT