உத்தரப்பிரதேசம் ஆக்ராவின் நிதி நிறுவனத்தில் 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வளக்கப்பட்ட கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர்கள் பலியாகினர்.
உலக அதிசயமான தாஜ்மகால் அமைந்த நகரம் ஆக்ரா. இதன் ஒரு பகுதியான கமலா நகரின் வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ளது மனப்புரம் நிதி நிறுவனம்.
இதில் நேற்று மதியம் 2..15 மணிக்கு திடீர் என 6 கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் புகுந்தனர். துப்பாக்கி முனையில் அந்நிறுவனத்தின் அலுவலர்களை மட்டகிய கொள்ளையர்கள், லாக்கரில் இருந்த 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.
வெறும் 20 நிமிடங்களில் முடிந்த கொள்ளைக்கு பின் வெளிப்புறம் பூட்டிவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர். பிறகு அக்கம், பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் வெளியே வந்த நிறுவனத்தினர் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
இதற்கு ஆக்ராவின் ஐஜியான நவீன் அரோரா, எஸ்எஸ்பியான தமிழர் ஜி.முனிராஜ் மற்றும் நகர எஸ்.பி ரோஹன் போத்ரே தம் படைகளுடன் வந்து விசாரணை நடத்தினர். ஜி.பி.எஸ் மூலமாக கொள்ளையர்கள் சென்ற தடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்த கொள்ளையர்களின் இருவரை அடுத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸாரின் தனிப்படை சுற்றி வளைத்தனர். ஆக்ராவின் மருந்து கடை ஒன்றில் ஒளிந்து கொண்ட கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
சுமார் 25 ரவுண்டு குண்டுகள் பொழிந்த சண்டையில் அதிர்ஷ்டவசமாக போலீஸார் உயிர் தப்பினர். கொள்ளையர்களில் இருவர் குண்டுகளால் படுகாயம் அடைந்தனர்.
இந்த இருவரில் ஒருவர் மணிஷ் பாண்டே, மற்றொருவர் நிர்தோஷ் குமார் என அடையாளம் காணப்பட்டது. இந்த இருவரும் ஆக்ராவின் எஸ்.என்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். தப்பியோடிய மற்ற கொள்ளையர்களை தமிழர் ஜி.முனிராஜ் தலைமையில் படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் தர்மபுரியின் அ.பாரப்பட்டியை சேர்ந்தவரான முனிராஜ்.ஐபிஎஸ் கூறும்போது, "‘இந்த கொள்ளைக் கும்பல் அருகிலுள்ள பெரோஸாபாத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்துள்ளது.
மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள். கொள்ளையர்களிடம் 2 கள்ளத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற நிதிநிறுவனங்களில் பாதுகாப்பு குறைபாடுகளும் கொள்ளைகளுக்கு வழி வகுத்து விடுகிறது." எனத் தெரிவித்தார்.
’உபி சிங்கம்’ முனிராஜ் ஐபிஎஸ்
விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ், கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர். தாம் பணியாற்றும் மாவட்டங்களில் தொடரும் அவரது அதிரடி நடவடிக்கைகளால் முனிராஜை ‘உபி சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சமீபத்தியக் கொள்ளையில் இது பெரியதாகப் பார்க்கப்படுகிறது. இதன் 2 கொள்ளையர்கள் அடுத்த 2 மணி நேரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டதும் முதல்முறையாக அமைந்துள்ளது