மத்திய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கன்ஞ் பசோடா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சந்தீப். கடந்த 15-ம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சிறுவனை மீட்க போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து சிறுவனை மீட்க முயன்றனர். சிலர் கிணற்றில் இறங்கி சிறுவனை தேடினர். மற்றவர்கள் கிணற்றின் சுவர் பகுதியை சுற்றி நின்றிருந்தனர். இந்நிலையில், பழைய கிணறு என்பதால் பாரம் தாங்காமல் பக்கவாட்டு சுவர், மண் சரிந்தது. இதில் 29 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வியாழக்கிழமை மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை வரை தொடர்ச்சியாக 24 மணிநேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 11 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் இரங்கல்
கிணறு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் நேரிட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கிணறு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு, காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.