ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது ரயில் எரிக்கப்பட்டது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச் சர்கள் உட்பட 300 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாயுடு பிரிவைச் சேர்ந்த காப்பு சமுதாயத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு கோதாவரி மாவட்டம், துனி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜயவாடா-விசாகப்பட்டினம் இடையே செல்லும் ரத்னாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக் காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவத்தில் ரயில் முற்றிலுமாக எரிந்தது. 16 போலீஸார் மற்றும் செய்தியாளர்கள் பலர் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து துனி பகுதியில் உள்ள 2 காவல் நிலையங்களில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த பத்மநாபம் உட்பட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள், பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 27 பேர் உட்பட 300 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், சம்பவத்தின்போது பயணிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்த வீடீயோ காட்சிகளையும் போலீஸார் திரட்டி வருகின்றனர். இதை ஆராய்ந்தபோது, சிலர் முகமூடி அணிந்து ரயிலுக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.
சாகும்வரை உண்ணாவிரதம்
முன்னாள் அமைச்சர் பத்மநாபம் துனி நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சி ஏற்கெனவே அறிவித்தபடி காப்பு சமுதாயத்தினரை பிற்படுத்தப்பட்டோர் (பிசி) பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் இவர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும். ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி எனது சொந்த கிராமமான கீர்லம்புடியில் நாளை காலை முதல் மனைவியுடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இதில் ஆதரவாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
பிசி பட்டியலில் சேர்க்கக் கூடாது
பிற்படுத்தப்பட்டோர் நல சங்க தேசிய தலைவர் ஆர்.கிருஷ் ணய்யா, ஹைதராபாதில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பின்தங்கிய சமுதாயத்தினரை இந்தப் பிரிவில் சேர்க்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். ஆனால் காப்பு சமுதாயத்தினர் வியாபாரம், கல்வி, பொருளாதாரம், சினிமா, அரசியல் உட்பட அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். எனவே அவர்களை பிசி பட்டியலில் சேர்க்கக்கூடாது.
இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம். இவர்களது கோரிக் கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கக் கூடாது. இதுதொடர்பாக கமிஷன் அமைக்கும் உரிமையும் மாநில அரசுக்கு இல்லை. இதையும் மீறி நடவடிக்கை மேற்கொண்டால், நாயுடு தலைமையிலான அரசை கவிழ்க்கவும் நாங்கள் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.