இந்தியா

தீவிரவாத தாக்குதல் நடத்த சதி ‘மதரஸா தலைவர்’ கைது

பிடிஐ

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக, மதரஸா தலைவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துஸ் சமி குவாஸ்மி. இவர் அறக்கட்டளை மற்றும் தனியாக மதரஸா நடத்தி வந்தார். இவர் தனியாக பல இணைய தளங்களில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மதரஸாவில் இந்தியாவுக்கு எதிராக இளைஞர்களை தூண்டி விடும் வகையில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அத்துடன் நாடு முழுவதும் பல இடங்களுக்கு சென்று நாட்டுக்கு எதிரான கருத்துகளை பரப்பி வந்துள்ளார். இதையடுத்து, அப்துஸ் சமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ பெற்றது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அப்துஸ் சமி தலைமறைவாக இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக என்ஐஏ அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். உ.பி. மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன், என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஹர்தோய் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அப்துஸ் சமியை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி கள் கூறும்போது, “அப்துஸ் சமி நடத்தி வந்த அறக்கட்டளை மற்றும் மதரஸாவுக்கு சட்டவிரோதமாக பணம் வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT