கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா நிலவரம் தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கரோனா தொற்று பரவல் குறையும் விகிதம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. இது எச்சரிக்கை மணி. அடுத்த 100 முதல் 125 நாட்கள் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய காலகட்டம்.
ஐசிஎம்ஆர் ஆய்வின்படி இரண்டு டோஸ் தடுப்பூசி 95 சதவீதம் கரோனா மரணங்களை தவிர்த்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி இறப்பு அபாயத்தை 82 சதவீதம் வரை குறைத்துள்ளது.
எனவே, ஜூலை மாதத்துக்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்குடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதை நெருங்கும் நிலையில் இருக்கிறோம். அரசாங்கம் 66 கோடி கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு விண்ணபித்துள்ளது. அதுதவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 22 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும். மூன்றாவது அலை ஏற்படக்கூடாது என்று பிரதமர் எங்களுக்கு பணித்துள்ளார்" என்றார்.
மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், "முகக்கவசம் பயன்படுத்துதல் வெகுவாகக் குறைந்துள்ளது. பல்வேறு தளர்வுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் முகக்கவசம் அணிவதை நம் வாழ்வின் புதிய இயல்பாக நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய பிரதமர், "உருமாற்றம் அடைந்து வரும் கரோனா வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும். எனவே இதன் பாதிப்பு 3-வது அலையை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது. கரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.