மத்திய வெளியுறத்துறையின் சென்னையிலுள்ள கிளை செயலகத்தில் இயக்குநர் எம்.வெங்கடாசலத்துடன் வங்கதேசத்தின் புதிய துணைத்தூதரான ஷெல்லி ஷலேஹின் 
இந்தியா

சென்னையில் வங்கதேசத்தின் துணைத்தூதரகம்: துணைத்தூதராக ஷெல்லி ஷலேஹின் பொறுப்பேற்பு

ஆர்.ஷபிமுன்னா

தென் மாநிலங்களுக்காக சென்னையில் வங்கதேசத்தின் துணைத்தூதரகம் துவங்க உள்ளது. இதற்கான துணை தூதராக ஷெல்லி ஷலேஹின் நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் வர்த்தகக் கூட்டாளியாக முதல்நிலையில் இருப்பது வங்கதேசம். அதேபோல், அந்நாட்டிற்கும் தெற்காசியாவின் வர்த்தகக் கூட்டாளியாக இரண்டாவது நிலையில் இந்தியா உள்ளது.

வங்கதேசத்துடன் இந்தியாவிற்கு வருடம் பத்து பில்லியன் டாலர் அளவிலான வியாபாரம் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பங்கும் கணிசமாக உள்ளது.

இந்நிலையில், தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் ராஜ்ஜிய உறவுகளுக்காக ஒரு துணை தூதரகம் நியமிக்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இதற்கு உகந்த நகரமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

இங்கு தனது துணைத்தூதரகம் அமைக்கும் பொருட்டு வங்கதேசத்திலிருந்து துணைத்தூதராக ஷெல்லி ஷலேஹின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சென்னையில் தன் நாட்டு துணைத்தூதரகம் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளார்.

வங்கதேசத்தின் முதல் இந்தியத் துணைத்தூதரான ஷெல்லி ஷலேஹின், சென்னையிலுள்ள மத்திய வெளியுறவுத்துறையின் கிளை செயலகம் சென்றிருந்தார். அதன் தலைமை அதிகாரியான இயக்குநர் எம்.வெங்கடாசலத்தை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

சென்னையில் அமையவிருக்கும் வங்கதேசத்தின் துணைத்தூதரகத்திற்கு உதவிகள் செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. வங்கதேசத்துடன் இந்தியாவிற்கு ராஜ்ஜிய உறவுகள் துவங்கி 50 வருடங்கள் நிறைவடைய உள்ளன.

இதற்காக, வரும் 2022 இல் இந்தியாவில் அதன் 50 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. கரோனா பரவல் காலத்தில் ஒரே நாடாக வங்கதேசத்திற்கு மட்டும் சென்றிருந்தார் பிரதமர் நரேந்தர மோடி.

அப்போது, அந்நாட்டின் அதிபரான ஷேக் ஹசீனாவை 50 ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்காக இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக இந்தியா வரவிருக்கும் அதிபர் ஷேக் ஹசீனா, சென்னைக்கும் வரும் வாய்ப்புகளும் உள்ளன.

SCROLL FOR NEXT