இந்தியா

யானைகள் மீது ரயில்கள் மோதுவதை தவிர்க்க நடவடிக்கை: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நாட்டின் சுற்றுலா மையங்களை இணைக்கும் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கலில் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டதாவது:

சுற்றுலா துறை பொருளாதார மேம்பாட்டிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய இடம்பெற்றுள்ளது. சுற்றுலா மையங்களை இணைக்கும் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே துறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும்.

வருவாயை பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். தேசிய ரயில் அருங்காட்சியகம் அண்மையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே அருங்காட்சியகங்கள் யுனஸ்கோவின் உலக புராதன ரயில்வே ஆகியவற்றின் வாயிலாக சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

வியக்கத்தகு இந்தியா இயக்கத்தில் நமது நாட்டின் செழிப்பான பன்முக உயிரியும், வனப்பரப்பும் முக்கிய இடத்தில் உள்ளன.

ரயில் பாதைகளில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் யானைகள் மீது ரயில்கள் மோதுவதை குறைப்பதற்கான முன் முயற்சியை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது. நமது தேசிய விலங்கான புலி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முழு அளவிலான பயண திட்டத்தை ரயில்வே துறை அளிக்க உள்ளது.

கன்ஹா, பென்ஞ், பந்தவ்கட் ஆகிய இடங்களை உள்ளடக்கிய வனவிலங்கு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் ரயில் பயணம் - வனப்பயணம் தங்கும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பயணத்திட்டம் இருக்கும்.

இவ்வாறு கூறினார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

SCROLL FOR NEXT