இந்தியா

பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

பிடிஐ

போராட்டங்களின் போது பொது சொத்துக்கள் நாசம் செய்யப்படுகின்றன. அதற்கு யார் பொறுப்பு? இந்த பிரச்சினையில் புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்தது. ஹர்திக் படேல் என்பவர் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹர்திக் உட்பட சிலர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் ஹர்திக் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜாமீன் வழங்க கோரி ஹர்திக் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் 2 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், அதேபோல் தேச துரோக வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த மனுக்கள் நீதிபதி ஜே.எஸ்.கெஹார், நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘போராட்டங்களின் போது பொது சொத்துக்களுக்கு நாசம் ஏற்படுத்துகின்றனர். அதற்கு யார் பொறுப்பு. இந்த நாட்டை யாரும் சூறையாட முடியாது. பொது சொத்துக்களை நாசப்படுத்துபவர்களை பொறுப்பாளியாக்கி நஷ்டஈட்டை பெற வேண்டும். இந்த விவகாரத்தில் புதிய நெறிமுறைகளை வகுக்க இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது’’ என்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘‘முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து ஹர்திக் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, இதை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. மேலும் அவருடைய ஜாமீன் மனு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள் மீண்டும் குறுக்கிட்டு, ‘‘ஹர்திக் ஜாமீன் பெறுவதில் முனைப்பாக இருக்கிறார். ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பற்றி கவலைப்படவில்லை. அதை விட மிகப்பெரிய பிரச்சினை போராட்டங்களின் போது பொது சொத்துக்களை நாசப்படுத்துவது. அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, விரைவில் தீர்வு காண இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. பொது சொத்துக்களை நாசப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றனர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘‘பாஜக.வோ அல்லது காங்கிரஸோ அல்லது வேறு அமைப்புகளோ, பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்தால் சம்பந்தப்பட்ட அந்த கட்சிகள்தான் பொறுப்பு என்பதை உணர வேண்டும்’’ என்றனர்.

இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT