சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணனை, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி கர்ணன், தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு, நீதித்துறை பணிகள் எதுவும் ஒதுக்கக்கூடாது’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எந்த அலுவலும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நீதிபதி சி.எஸ்.கர்ணன் மார்ச் 11-ம் தேதிக்குள் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி யாக பதவியேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருப்பதாகவும், அந்தத் தகவல் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு தெரிவிக் கப்பட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.