உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா மனித உரிமை மீறல் என தியோபந்த் மதரஸாவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், சாதுக்களின் உயரிய அமைப்பான அகில இந்திய சாதுக்கள் சபை பெரும் ஆதரவளித்துள்ளது.
பாஜகவின் முதல்வரான யோகி ஆதித்யநாத் அரசு, கடந்த ஞாயிற்றுக்கிழமை, மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா 2021-2030 வருடத்திற்கான வரைவை வெளியிட்டது. இதில், இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாகப் பெறுவோருக்கு உ.பி. அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது எனக் குறிப்பிட்டார்.
அரசுப் பணி, பதவி உயர்வு, ரேஷன் அட்டைகளும் கிடைக்காததுடன், உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர்களாகத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.
இது மனித உரிமை மீறல் என, சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்த் நகரில் தாரூல் உலூம் மதரஸா புகார் கூறியுள்ளது. மேலும், இந்த மசோதா முஸ்லிம்களை குறிவைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதை எதிர்த்து கிளர்ச்சி உருவாகும் எனவும் அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் தாரூல் உலூம் தியோபந்த் மதரஸாவின் செய்தித் தொடர்பாளரான அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, ''இந்த மசோதா சட்டமாக்கப்பட்ட பின்பு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்படும் குழந்தைகள் செய்த பாவம் என்ன? இந்த முறையில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் மனித உரிமை மீறலாகும்'' எனத் தெரிவித்தார்.
இந்த மதரஸா, சன்னி பிரிவு முஸ்லிம்களுக்காக சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து செயல்படுகிறது. உலக முஸ்லிம் நாடுகள் இடையேயும் நற்மதிப்பைப் பெற்ற இந்த மதரஸாவிற்கு உ.பி. உள்ளிட்ட இந்திய முஸ்லிம்களால் மிகவும் மதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை மதரீதியாக எதிர்க்கக் கூடாது என்றும் முஸ்லிம்கள் இடையே ஒரு கருத்து உருவாகியுள்ளது.
இதன் மீது இதே தாரூல் உலூம் மதரஸாவின் மூத்த ஆசிரியரான உலமா முப்தி தாரீக் காஸ்மி கூறும்போது, ''எத்தனை குழந்தைகள் பெறுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டுகளை விதிப்பது முற்றிலும் மனித உரிமை மீறல் ஆகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், உபி அரசின் இந்த மசோதாவிற்கு இந்து மதத்தின் துறவிகள் இடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சாதுக்களின் உயரிய அமைப்பாகக் கருதப்படும் அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைமராவ மஹந்த் நரேந்தர கிரி கூறும்போது, ''உ.பி.யின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இங்கு பெருகி வரும் மக்கள்தொகையும் ஒரு முக்கியக் காரணம். இதன் பாதிப்பு நேரடியாக மக்களுக்கான கல்வியும், மருத்துவ நலனும் பாதிக்கப்படுகிறது. எனவே, இதை உ.பி. உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ளவர்கள் கட்டுப்படும் வகையில் கடுமையான சட்டம் அமலாக்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், மக்கள்தொகை சட்டத்தை முஸ்லிம்களுடன் இணைத்தும் கருத்து கூறியுள்ளார். இதன் மீது மஹந்த நரேந்தர கிரி, ''முஸ்லிம்கள் மூன்று திருமணங்கள் செய்யலாம் என அவர்களது மதச் சட்டத்தில் உள்ளது. இருப்பினும், இந்தச் சட்டத்தின் பலனை பெறும் முஸ்லிம் ஆண்கள் மூன்று பெண்களை மணம் புரிந்தாலும், ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் மட்டுமே பெற வேண்டும்'' எனவும் ஆலோசனை அளித்துள்ளார்.
தற்போது உ.பி. அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின் வரைவு மீது ஜூலை 19 வரை பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. இது ஆகஸ்டில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமாக அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.