கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறியதாவது:
பிரதமர் மோடியுடனான சந்திப்பு பலனுள்ள வகையில் இருந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தோம். அவருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்று சொல்வேன். கேரளத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளோம். கேரளத் திட்டங்களுக்கு உதவுவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் லைட் மெட்ரோ திட்டம், கொச்சி மெட்ரோவின் 2-ம் கட்டத் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய பல்வேறு திட்டங்களுக்கு உதவுவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். கேரளாவில் கெயில் நிறுவனத்தின் பைப்லைன் திட்டத்தை கேரள அரசு வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் பிரதமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களில் பிரதமர் ஆர்வம் காட்டினார். அதை கேரளாவில் மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். வாரணாசி-கொல்கத்தா நீர்வழிப் பாதைத் திட்டம் போல செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
ஜூலை மாதத்துக்குள் மேலும் 60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கேரளாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் அப்போது பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் உறுதி அளித்தார். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
இதைத் தொடர்ந்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை பினராயி விஜயன் சந்தித்துப் பேசினார். - பிடிஐ