இந்தியா

மாநிலங்களவை பாஜக தலைவராகிறார் பியூஷ் கோயல்

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக மாநிலங்களவை குழுத் தலைவராகிறார். தற்போது அவைத்தலைவராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால், மாநிலங்களவை பாஜக துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த பியூஷ் கோயல் மாநிலங்களவை பாஜக தலைவராக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவை மெகா விரிவாக்கம் கண்டது.

இதில், பியூஷ் கோயல் ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் வகித்துவந்த ரயில்வே துறை அஷ்வினி வைஷ்ணவிடம் ஒப்படைக்கப்பட்டது.

57 வயதான பியூஷ் கோயல் பிரதமரின் அபிமானம் பெற்ற அமைச்சர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ஜேட்லி நிதித்துறை பதவியிலிருந்து விலகியபோது பியூஷ் கோயலுக்குத்தான் அந்தப் பதவி கிடைக்க அதிகம் வாய்ப்பு எனக் கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காமல் அந்தப் பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக பியூஷ் கோயல் அறிவிக்கப்படாதது கேள்விகளை எழுப்பிய நிலையில் தற்போது அவர் மாநிலங்களைத் தலைவராக்கப்பட்டுள்ளார். இனி இயல்பாகவே அவர் அந்த கமிட்டியில் இடம்பெறுவார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்காலக்கூட்டத்தொடர் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்பாக வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம்தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT