அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்துக்குக் காரணமின்றிக் கட்டுப்பாடு விதிக்கும் தேசவிரோதச் சட்டம் செல்லுபடியாகுமா என்பது குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை 15-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.சுரேஷ், பிரசன்னா இருவரும், இந்த வழக்கு தொடர்பான நகலை அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு வழங்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. வாம்பாத்கரே தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
''ஐபிசி சட்டத்தில் 124-ஏ பிரிவு என்பது தேசத்துரோகச் சட்டத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சமத்துவமற்றது. சந்தேகத்துக்கு இடமின்றி, தெளிவாக இந்தச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டியது ஒன்றுதான்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான வகையில் இந்தச் சட்டத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்ற வகையில் சட்டத்துக்குத் தெளிவற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (சி) வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்குத் தேவையற்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அனுமதிக்காமல் சட்டம் மறுக்கிறது.
இந்தச் சட்டத்தில் உள்ள 124 (ஏ) பிரிவு கொண்டுவருவதற்கு முன்பு இருந்த காலகட்டத்தை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. 1962-ம் ஆண்டு கேதார்நாத் வழக்கில் வழங்கப்பட்டதீர்ப்பு என்பது ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அப்போது அடிப்படை உரிமைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை.
1962-ம் ஆண்டு காலத்தில் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமைக்கான கோட்பாடு போதுமான அளவில் வகுக்கப்படவில்லை. 1967-ம் ஆண்டுதான் இதற்கான கோட்பாடு உருவாக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு ஸ்ரேயா சிங்கால் மத்திய அரசு இடையிலான வழக்கில்தான் பேச்சுரிமை, கருத்துரிமை குறித்து உறுதியான தீர்ப்பு தரப்பட்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.