மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் | கோப்புப்படம் 
இந்தியா

முகக்கவசம் அணிய மக்கள் ஏன் மறுக்கிறார்கள்? மத்திய அரசு கூறும் 4 காரணங்கள்

ஏஎன்ஐ


கரோனா வைரஸ் 2-வது அலை வந்தநிலையிலும் மக்கள் முகக்கவசத்தை தொடர்ந்து அணிவதற்கு ஏன் மறுக்கிறார்கள் என்பதற்கான பொதுவான 4 காரணங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள தடுப்பூசி முக்கிய ஆயுதமாக இப்போது கருதப்படுகிறது. ஆனால், கரோனா முதல் அலை மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை அலைகள் வந்தாலும் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் முகக்கவசம், சமூகவிலகல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கழுவுவதாகும். இந்த தடுப்பு முறைகளை முறையாகச் செய்தாலே கரோனா தொற்றிலிருந்து நாம் காத்துக் கொள்ளலாம்.

ஆனால், மக்களில் பலரும் முகக்கவசம் அணிகிறேன் என்ற பெயரில் மூக்கை முழுமையாக மூடாமல் வாயை மட்டும் மூடுவது போல் அணிவது, தாடைப்பகுதியில் வைத்துக் கொள்வது, சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு யாரேனும் கேட்டால் மட்டும் அணிவது என்று முகக்கவசத்தின் பாதுகாப்புக் குறித்து சரிவர தெரியாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில், முகக்கவசம் அணிவதற்கு மக்கள் ஏன் தயங்குகிறார்கள், சரிவர ஏன் அணிவதில்லை என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அது குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று பேட்டி அளித்தார். அப்போது மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான பொதுவான 4 காரணங்களை அவர் பட்டியலிட்டார்.

அவை

  1. முகக்கவசம் அணிவதால் சுவாசிக்க சிரமம் இருப்பதால் அணிவதில்லை.
  2. முக்கவசம் அணிவது வசதிக் குறைவாகவும், தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் இருப்பதால் அணியவில்லை.
  3. ஒருவருடன் பேசும் போது நீண்ட தொலைவு சமூக விலகல் விட்டு நின்று இருக்கும்போது முகக்கவசம் தேவையில்லை என்பதால் அணிவதில்லை
  4. முகக்கவசம் அணிவதால் மட்டும் கரோனா பரவுவதைத் தடுக்க முடியாது என்று நம்பிக்கை

முகக்கவசம் அணிவதால் மட்டும் கரோனா பரவலைத் தடுக்க முடியாது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது தவறான நம்பிக்கை. கரோனா பரவலைத் தடுக்கும் முக்கியக் கருவி முகக்கவசம். மக்கள் மத்தியில் இதுபோல் நிறைந்திருக்கும் தவறான புரிதல் காரணமாகவும், கவனக்குறைவும்தான் மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும்,

கரோனா தடுப்புவழிகளைப் பின்பற்றாவிட்டால், கரோனா 3-வது அலை சாத்தியம். ஆனால், நாங்கள் கரோனா 3-வது அலை குறித்துப் பேசும்போது வானிலை அறிக்கை படிப்பதுபோல் மக்கள் நினைக்க வேண்டாம்

இவ்வாறு லாக் அகர்வால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT