மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் | கோப்புப்படம் 
இந்தியா

முதல்முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு; குவைத்தில் தேர்வு மையம்: தர்மேந்திர பிரதான் தகவல்

பிடிஐ

மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை-நீட் நுழைவுத் தேர்வு முதல்முறையாக மலையாளம், பஞ்சாப் உள்பட 13 மொழிகளில் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கரோனா தொற்று முதல் அலையால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம்தேதி நீட் தேர்வு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில் புதிதாக பதவி ஏற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிவிப்பில் “ 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும், ஜூலை 13ம் தேதி முதல் இணையத்தில் வி்ண்ணப்பதிவு தொடங்கும்” என அறிவித்தார்.

இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட தகவலில் கூறுகையில் “ இளநிலை நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல்முறையாக 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுகள் இதற்கு முன் தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய11 மொழிகளில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மலையாளம், பஞ்சாபி மொழியிலும் நடத்தப்படும்

அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு எழுதுவோர் வசதிக்காக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்காக குவைத்தில் இந்த ஆண்டு புதிய தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் 2020ம் ஆண்டில் 3,862 ஆக இருந்த நிலையில் அதற்கும் மேல் உயர்த்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT