பிரதமர் மோடி | கோப்புப்படம் 
இந்தியா

ஓர் ஆண்டுக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக இன்று கூடுகிறது

பிடிஐ


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஓர் ஆண்டுக்குப்பின் இன்று மீண்டும் நேரடியாகக் கூடுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அனைத்தும் காணொலி வாயிலாகவே நடந்து வந்தன. இந்நிலையில் ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக இன்று காலை 11 மணிக்குக் கூடுகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அதன்பின் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூட்டம் காணொலி வாயிலாகவே நடந்தப்பட்டு, முக்கிய விவகாரங்களும், முடிவுகளும் காணொலி வாயிலாகவே எடுக்கப்பட்டன.

இது தவிர இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் குழுக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றபின் ஏற்கெனவே அமைச்சர்கள் குழு கூட்டம் கடந்த 8ம் தேதி நடந்த நிலையில் 2-வதுமுறையாக இன்று நடக்கிறது.

வரும் 19-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், எழுப்பும் விவகாரங்களுக்கும் பதில் அளிப்பது, அவர்களை சமாளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

ஏராளமான அமைச்சர்கள் மத்திய அமைச்சரவைக்கு புதியவர்கள் என்பதால், மழைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து அறிவுரை வழங்கவும் இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT