இந்தியா

மத்திய அமைச்சர் மனைவிக்கு எதிரான பதிவை நீக்க வேண்டும்: சமூக ஆர்வலருக்கு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மனைவிக்கு எதிரான ட்விட்டர் பதிவுகளை உடனடியாக நீக்குமாறு சமூக ஆர்வலர் ஒருவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சாகேத் கோகலே என்பவர் கடந்த சில தினங்களாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அவரது மனைவி லட்சுமி முர்தேஷ்வர் புரி குறித்து ட்விட்டரில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். அதாவது, லட்சுமி முர்தேஷ்வர் புரி சுவிட்சர்லாந்தில் அண்மையில் சில சொத்துகளை வாங்கியுள்ளதாகவும், இவை அவரது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் இருப்பதாகவும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் லட்சுமி முர்தேஷ்வர் அவதூறு வழக்கை தொடர்ந்தார். அதில், “எந்தவித ஆதாரமும் இன்றி என் மீதும், என் கணவர் மீதும் சாகேத் கோகலே குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்து வருகிறார். இதற்கு நஷ்ட ஈடாக எங்களுக்கு ரூ.5 கோடி வழங்க கோகலேவுக்கு உத்தரவிட வேண்டும்" என லட்சுமி கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஹரிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கூறியதாவது:

லட்சுமி முர்தேஷ்வர் புரிக்கு எதிராக சாகேத் கோகலே பதிவிட்டிருக்கும் அனைத்து ட்விட்டர் பதிவுகளையும் அவர் உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு அவர் நீக்கவில்லை எனில், ட்விட்டர் இந்தியா நிறுவனம் அந்தப் பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை, மனுதாரர் மற்றும் அவரது கணவர் தொடர்பாக எந்த அவதூறு பதிவையும் கோகலே பதிவிடக் கூடாது. இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் சாகத் கோகலே பதிலளிக்க வேண்டும். இவ்வாறு தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT