லட்சத்தீவுகளில் பால் பண்ணை களை மூட வேண்டும்; பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் அசைவத்தை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகளை அந்த லட்சத்தீவுகள் யூனியன் பிரதேச நிர்வாகியான பிரபுல் படேல் அண்மையில் முன்மொழிந்தார்.
இதற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கடந்த மாதம் 22-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு இடைக் காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக லட்சத்தீவுகள் நிர்வாகம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்:
லட்சத்தீவுகளில் செயல்படும் பால் பண்ணைகளால் நிர்வாகத்துக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டே பால் பண்ணைகளை மூட முடிவெடுக்கப்பட்டது. லட்சத்தீவுகளை பொறுத்தவரை, ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிலும் இறைச்சி என்பது பிரதான உணவாக இருக்கிறது. ஆதலால், பள்ளிகளிலும் அவற்றை வழங்குவதற்கு பதிலாக, பழங்களையும், உலர் பழங்களையும் மதிய உணவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன். ஆகவே, இவற்றை செயல்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்்பட்டுள்ளது. - பிடிஐ