லாவ் அகர்வால் 
இந்தியா

கரோனா பரவல் அதிகரிப்பு; 11 மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய குழுக்கள்

செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரித்துள்ள கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட 11 மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்தது.

தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றிருந்தனர். கரோனா பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு செய்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்கினர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடுமுழுவதும் சில மாநிலங்களில் கோவிட் எண்ணிக்கை குறைந்த போதிலும் சீராக குறைவதில்லை. எனினும், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

கரோனா மூன்றாவது அலை பற்றி பேசி வரும் நிலையில் அதன் தீவிரத்தன்மையையும் அதை தடுப்பதற்கான பொறுப்புகளையும் புரிந்து கொள்ளவில்லை.

சத்தீஸ்கர், கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 11 மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT