கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாட்டில் கரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத் தொடங்கியுள்ளது. தற்போது தினசரி கரோனா தொற்றுபாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்த சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன.
கரோனா தொற்று பரவலின் பாசிட்டிவ் விகிதம் நாட்டில் 73 மாவட்டங்களில் 10 சதவீதமாக இருந்தது என்று கடந்த வாரம் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்தது.
இதில் 46 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை. இந்தநிலையில் வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அந்த மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கினார்.