இந்தியா

கேரள அரசின் செயல்பாடுகளால் அதிருப்தி: தெலங்கானாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது கிடெக்ஸ்

செய்திப்பிரிவு

கேரள அரசின் செயல்பாடு களால் அதிருப்தி அடைந்த அம்மாநில தொழிலதிபர் தெலங்கானாவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முடிவு செய்துள்ளார்.

உலகிலேயே குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பில் 2-வது இடம் வகிப்பது கிடெக்ஸ் கார்மென்ட்ஸ். இந்நிறுவனத்தின் நிறுவனராக சாபு ஜேக்கப் உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் ரூ.3,500 கோடி முதலீடுசெய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால்அந்த முடிவை அவர் கைவிட்டுள்ளார். மாறாக பிற மாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கிடெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சாபு ஜேக்கப் தலைமையிலான குழுஹைதராபாத்துக்குச் சென்று மாநில தொழில் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. முதல் கட்டமாக இந்நிறுவனம் வாரங்கலில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப் போவதாகஅறிவித்துள்ளது. இதன்மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் சாபு ஜேக்கப் கூறியதாவது: சொந்த மாநிலத்தை விடுத்து வேறு மாநிலங்களில் முதலீடு செய்ய வேண்டிய சூழலுக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் செயல்பாடு உள்ளது. எங்கள் நிறுவன ஆலையைஅமைக்குமாறு 9 மாநிலங்களிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எனது சொந்த மாநிலத்திலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை.

புறக்கணிப்பு, நிராகரிப்பு

எனது வாழ்நாளில் எனது சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு வேறு மாநிலத்தில் தொழில் தொடங்கும் எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஆனால் புறக்கணிப்பு, நிராகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ள முடியும். இவற்றுக்கெல்லாம் வடிகாலாக மாநிலத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே வழியாக இருக்கும் என்று தோன்றியதால் இத்தகைய முடிவை எடுத்தேன்.

கடந்த 53 ஆண்டுகளில் தொழில் துறையில் கேரளாவை சிறந்த மாநிலமாக உருவாக்க என்னால் ஆன நடவடிக்கைகளை எடுத்ததோடு ஏறக்குறைய 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளாவில் மிக அதிக அளவிலான வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனமாக கிடெக்ஸ் திகழ்கிறது. இதில் 15 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதன் ஆலை எர்ணாகுளத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் அரசியல் அமைப்பான ட்வென்டி20 உள்ளாட்சித் தேர்தலில் 2015-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஆனால்கடந்த 6 மாதங்களில் கிடெக்ஸ் நிறுவனத்தில் 11 முறை சோதனைநடத்தப்பட்டுள்ளது. கிடெக்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மாநில தொழில் துறை அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT